பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரெயில் : நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி

சென்னை

வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பேச்சு வார்த்தை 3 ஆம் முறையாக தோல்வி அடைந்துள்ளது.

கடந்த 1985 ஆம் ஆண்டு சென்னை பறக்கும் ரெயில் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த 1991 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் சென்னை கடற்கரையில் இருந்து பூங்கா நகர் வரை அமைக்கப்பட்ட இந்த ரெயில் திட்டம் விரிவாக்கப்பட்டு தர்போது வேளச்சேரி வரை உள்ளது. பெரும்பாலான பகுதிகளின் இந்த ரெயில் மேம்பாலத்தில் செல்வதால் இதை பறக்கும் ரெயில் என அழைக்கின்றனர்.

அதன் பிறகு வேளச்சேரி – பரங்கிமலை வரை விரிவாக்க திட்டம் தீட்டப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் எவ்வித முன்னேற்றமும் இன்றி உள்ளது. இதில் ஆதம்பாக்கம் முதல் பரங்கிமலை வரை உள்ள 500 மீட்டர் பாதைக்கான நிலத்தை கையகப்படுத்த இயலாததே இந்த திட்டத்தின் தாமதத்துக்கு காரணம் ஆகும். இந்த நிலம் 37 குடும்பங்க்ளிடம் உள்ளது. அதை கையகப்படுத்த ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

நிலத்தை வழங்கும் உரிமையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளதாக நில உரிமையாளர்கள் கருதுகின்றனர். சந்தை விலைக்கும் இழப்பீட்டு தொகைக்கும் நிறைய வேறுபாடு உள்ளதால் நில உரிமையாளர்கள் நிலத்தை அளிக்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மூன்றாம் முறையாக நிலம் கையகப்படுத்துவது குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது.

நில உரிமையாளர்கள் தற்போதைய சந்தை விலையான சதுர அடிக்கு ரூ. 6500 என அளித்தால் மட்டுமே நிலத்தை வழங்க முடியும் என கண்டிப்பாக கூறி உள்ளனர். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் சதுர அடிக்கு ரூ.3740 விலை மட்டுமே தர முடியும் என கூறி உள்ளனர். ஆகவே இம்முறையும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

You may have missed