காஃபி டே பங்குகளைக் கொக்கோ கோலா வாங்குகிறதா? : மீண்டும் பேச்சு வார்த்தை தொடக்கம்

பெங்களூரு

பெங்களூருவைச் சேர்ந்த புகழ்பெற்ற நிறுவனமான காஃபி டே பங்குகளைக் கொக்கோ கோலாவுக்கு விற்க பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

பெங்களூருவில் மறைந்த தொழிலதிபர் சித்தார்த்தாவால் நிறுவப்பட்ட காஃபி டே நிறுவனம் இந்தியாவில் 1750 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.   இந்த நிறுவனத்துக்கு ஏராளமான கடன்கள் இருக்கின்றன.   விற்பனை நிலை சீராக இருந்த போதிலும் கடன் தொல்லை தீராமல் இருந்ததால் இந்த நிறுவனப் பங்குகளை அப்போதே கொக்கோ கோலா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.

இந்த பங்குகளுக்கு அவர் சுமார் ரு. 8000 – ரூ. 10000 கோடி வரை கேட்டிருந்ததாகவும்  ஆனால் கொக்கோ கோலா நிறுவனம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  இதற்கிடையில் சித்தார்த்தா காணாமல் போய் அதன் பிறகு நேத்ராவதி நதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.   அதைத் தொடர்ந்து மற்ற பங்குதாரர்கள் கடனை அடைக்க பங்குகளை விற்க முயன்று வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த காஃபிடே குழுவுக்குச் சொந்தமான பெங்களூருவில்  உள்ள குளோபல் வில்லேஜ் டெக் பார்க் ரூ.3000 கோடிக்கு விற்கப்பட்டு கடன் அடைக்கப்பட்டுள்ளது  தற்போது ரூ.2400 கோடி அளவுக்குக் கடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.  அதையொட்டி பங்குகள் விற்பது குறித்து கொக்கோ கோலாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.   ஆனால் இது குறித்து கொக்கோ கோலா நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.