கீழடி அகழாய்வு பற்றிய உரையாடலை தமிழ்ப் பண்பாடு என்றழைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கீழடி அகழாய்வுகள் தொடர்பான விவாதங்களை முன்வைத்து பல்வேறு கேள்வி பதில் வடிவங்களில் சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்து வருகிறார். அதில், கீழடி அகழ்வாய்வு பற்றிய உரையாடல்களில் தமிழ் / தொல் தமிழ் / திராவிடம் என்ற சித்தரிப்புகளில் எது மிகவும் பொருத்தமானது ? என்றொரு விவாதம் தொடர்ந்தது.

https://www.facebook.com/337465170086048/photos/a.337786650053900/682530942246134/?type=3&theater

இது குறித்து பதில் அளித்துள்ள ஆர்.பாலகிருஷ்ணன், “ஐயத்திற்கே இடமில்லாமல் தமிழ்ப் பண்பாடு என்பதே பொருத்தமானது ஆகும். இந்தத் தடயங்கள் சங்க காலம் என்று அறியப்படும் கால கட்டத்தை சேர்ந்தது. கீழடி சங்க இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடும் வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகே அமைந்திருப்பதாலும் வைகைக் கரையின் இருபகுதியிலும் பல அகழ்வாய்வு இடங்கள் இருப்பதாலும் இதை “வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு” என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.‌ சங்க இலக்கியம் ஆகச் சிறந்த தொல் தமிழ் இலக்கியம்.‌ வைகைக்கரை அதன் முக்கியமான களம்.‌ எனவே இந்த நாகரிகம் பற்றிக் குறிப்பிடும் போது திராவிடம் என்ற‌ சொல்லை பயன்படுத்த ஒரு தேவையும் இல்லை. அது “புரிதல் விகாரத்தில்” போய் முடியும். அது நல்லது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.