நாட்டின் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம்: கோவை தனியார் விடுதி அசத்தல்

கோவை:

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, நாட்டிலேயே உயர்ந்த கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்துள்ளது கோவையில் உள்ள தனியார் சொகுசு விடுதி. சுமார் 165 அடி உயரம் உள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25ந்தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் ஸ்டார் தொங்க விட்டும், கிறிஸ்துமரம் அமைத்தும் சிறப்பித்து மகிழ்விது வழக்கம்.

இந்த நிலையில், கோயமுத்தூரில் உள்ள தனியார் சொகுசு ஓட்டல் ஒன்று,  165 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதை வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளது.

சுமார் 36 அடி அகலத்தில் 165 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தில், ஒரு குடிலும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிலில்,  பல வகையான கேக் மற்றும் உணவுகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரம் ஓட்டலுக்கு வருவோர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் அப்பகுதி மக்களும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இந்த கிறிஸ்துமஸ் மரம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.