சென்னை: வாக்கு பெட்டிக்கு தீ வைப்பு, வாக்குச்சீட்டில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் நாளை மதுரை, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில், 76.19 சதவீத வாக்குகள் பதிவானது. சில பிரச்சனைகள் காரணமாக சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. சில இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் பாதிக்கப்பட்ட மதுரை, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம் சென்னகரம்பட்டி 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மறு தேர்தல் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச்சவாடி சூறையாடப்பட்டது. அதனால் 83 மற்றும் 84வது வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டம் செம்மங்குடி ஊராட்சியில் 8, 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மறு தேர்தல் நடக்கிறது. சீர்காழி அருகே கூழையார் மீனவ கிராமத்தில் 2 மற்றும் 3வது வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குளம் ஊராட்சி வேலவன் புதுக்குளம் வாக்குசாவடியில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் 21 வார்டு உறுப்பினர் பதவிக்கும் நாளை மறுதேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.