மத்திய அரசின் இணையதள நூலகத்தில் விரைவில் தமிழ்: அமைச்சர் மா.பா. விளக்கம்

சென்னை:

த்திய அரசின் இணையதள நூலகத்தில் தமிழ் உள்பட தென்மாநில மொழி புத்தங்கள் இடம்பெறாதது குறித்த சர்ச்ச்சை குறித்து,  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்  சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

அப்போது,  மத்திய இணைய தள நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் விரைவில் இடம்பெறும் என்று கூறினார்.

மத்திய அரசு நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி என்ற  இணைய தள நூலகம்  ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இந்த நூலகத்தில் தமிழ்மொழி நூல்கள் இதுவரை இடம்பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்றைய சட்டமன்ற விவாதத்தின்போது  கேள்வி நேரம் முடிந்ததும்  எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசினார். அப்போது, மத்திய அரசு தொடங்கியுள்ள இணைய தள நூலகத்தில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல தென்னக மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் நூல்களும் இடம் பெறவில்லை.

தெற்கு, வடக்கு என்று மாநிலங்களை பிளவு படுத்தும் வகையில் மத்திய அரசு நடந்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 3 லட்சம் எழுத்தாளர்கள் எழுதிய 1 கோடி நூல்கள் உள்ளன. தமிழக வரலாறு உள்ளது. இவையெல்லாம் இணைய தள நூலகத்தில் இடம் பெறவில்லை. ஆனால் வேறு நூல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளை புறக்கணித்து மத்திய அரசு சமஸ்கிருத துதி பாடுகிறது.

தமிழக மக்களை இவ்வாறு புறக்கணித்த மத்திய அரசிடம் முதலமைச்சர் பேசி இணைய தள நூலகத்தில் தமிழ்மொழி நூல்கள் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஸ்டாலின் பேசிய கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் பேசினார்.

அதையடுத்து, அதற்கு பதில் அளித்து பேசிய  தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டிய ராஜன், மத்திய அரசு இந்திய தேசிய இணைய தளத்தை (National digital Library)  தொடங்கி 5 நாட்கள்தான் ஆகிறது என்று கூறினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இந்த இணையதள நூலகத்தில்  இடம் பெற வேண்டும். இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் அறிய வேண்டும் என்பதற்காகவே இது தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தில் தமிழ், குஜராத்தி, கன்னடம் உள்பட  8 மாநில மொழி புத்தகங்கள்  விரைவில் இடம் பெற உள்ளது

இதுகுறித்து நான் ஏற்கனவே மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் தொடர்பு கொண்டு பேசி யிருப்பதாகவும், அப்போது, நாட்டில் உள்ள அனைத்து மொழி புத்தகங்களும் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெறும் என்று உறுதி அளித்தார் என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது  பரிசார்த்த முறையிலேயே இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருத நூல்கள்  இடம் பெற்றுள்ளதாகவும், அனைத்து மொழிகளும் நூல்களும்  இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நேஷனல் லைப்ரரியில், 149 தமிழ் அறிஞர்களின் 2 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் தமிழக அரசு உரிமம் பெற்றுள்ள 10 ஆயிரம் புத்தகங்கள்  இடம்பெறும் என்று கூறிய அமைச்சர், அதற் கான வடிவமைப்புகள் நடைபெற்று வருவதாகவும், இன்னும் 2 வாரத்துக்குள் அதற்கான பணிகள் நிறைவுபெற்று  அனைவரும் படிக்கும் நிலை உருவாகும்.

இவ்வாறு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்  கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன்,  சென்னையில் உள்ள  “கன்னி மாரா நூலகத்தில் உள்ள 10 ஆயிரம் புத்தகங்கள் இந்த இணைய தள நூலகத்தில் இடம் பெற செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.

You may have missed