Random image

வடிவேலு நடிக்கத்தடை?   

டிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசி.  பெரும் வெற்றிபெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை  இம்சை அரசன் 24-ம் புலிகேசி  என்ற பெயரில் தயாரிக்க திட்டமிட்டார் ஷங்கர். இதிலும் நாயகனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புதேவனே இயக்குவதாக இருந்தது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கு அமைக்கப்பட்டது.

ஆனால் படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்தார். இதனால் படத்துக்காகக் போடப்பட்ட அரங்கு வீணானது. இதையடுத்து வடிவேலு மீது படத்தை தயாரித்த இயக்குநர்  ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். நடிகர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து  வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது

பிறகு, “இப் படத்தில் நடிக்க வேண்டும். இல்லை என்றால் படத்துக்காக செலவழித்த தொகையை (சுமார் 9 கோடி) திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று வடிவேலுவிடம் தயாரிப்பாளர் சங்கம் கூறியது. இதை முதலில் மறுத்துவந்த வடிவேலு, பிறகு நடிக்கச் சம்மதித்தார்.
ஆனாலும் வடிவேலு படப்பிடிடிப்புக்கு வரவில்லை. இந்நிலையில் இந்தப் பிரச்னை பற்றி தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் வந்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம், “மேலும் இரண்டு கோடி ரூபாய் வாங்கிக்கொடுங்கள். நடித்துத்தருகிறேன்” என்று வடிவேலு கூறினார்.

இதை ஏற்றுக்கொள்ளாத தயாரிப்பாளர் சங்கம் அவருக்குத் தடை விதிக்க முடிவு செய்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதித்துள்ளது. அதிகாரபூர்வமற்ற இந்த வாய்மொழி தடை காரணமாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருந்த படமும் இன்னொரு படமும் சிக்கலில் உள்ளதாக தமிழ்த்திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது