தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்த விஷாலின் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் விஷால் தொடர்கிறார்.வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் முறைகேடு நடந்துள்ளது” போன்ற எண்ணற்ற குற்றசாட்டுகள் முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதன்படி, என்.சேகர் என்ற அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் விஷால்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு இன்று விஷால் தரப்பினரால் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.