சென்னை:

சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில்பேசும்போது,  உலகின் மிகப்பழமையான மொழி தமிழ்; தமிழை போற்றுவோம்! என புகழாரம் சூட்டினார்.

இந்தியா மீது உலகம் நம்பிக்கை வைத்திருக்கிறது; எதிர்காலக் கனவை உங்கள் கண்களில் நான் பார்க்கிறேன் எனவும் மாணவர்களைப் பார்த்து மோடி பெருமிதத்தோடு கூறினார்.

சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, முன்னதாக  தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில்  “இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019′ என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.

அதைத்தொடர்ந்து ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய மோடி, ”என்னுடைய சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது, உலகத் தலைவர்களுடன், தொழில் நிறுவனத் தலைவர்களுடன், தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினேன்.

அப்போது ஒரு விஷயத்தில் அனைவரும் பொதுவாக உரையாடினோம். அது புதிய இந்தியா மீதான நம்பிக்கை.  உலகம் இந்தியா மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்தியாவில் தனித்துவம் வாய்ந்த பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உலகம் காண்கிறது.

உலக அளவில் இந்தியர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்குகிறார்கள். இதுபோன்ற செய்பவர்கள், சாதிப்பவர்கள் யார், ஐஐடியில் படித்து முடித்துச் சென்ற உங்களின் முன்னாள் மாணவர்கள். உலக அளவில் இந்தியாவை வலிமையான அடையாள மாக நீங்கள் மாற்றுகிறீர்கள்.

உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம் எனப் பேசினார். இதைக்கேட்ட மாணவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய மோடி,இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கையை கண்டு உலகம் வியக்கிறது. சிறந்த மாணவராக மட்டுமன்றி சிறந்த குடிமகனாகவும் விளங்க வேண்டும்.  . நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி உள்ளது. இந்தியாவின் இளைய தலைமுறையினரின் நம்பிக்கையைக் கண்டு உலகத் தலைவர்கள் பிரமிக்கின்றனர். இளைஞர்களின் திறமைக்கு பின்னணியில் சென்னை ஐஐடி உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட நாடாக மாற முயன்று வருகிறது. உங்களின் கண்டுபிடிப்பும், தொழில்நுட்பத்தில் ஆர்வமும் கனவுகளை நனவாக்கும் எரிபொருளாக அமையும். உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் கடும் போட்டியளிக்கும் நாடாக மாறும்

பொருளாதாரம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் சிறந்த கூட்டுக் கலவையாகவே இந்தியாவின் கண்டுபிடிப்பு இருக்கிறது. நான் மாணவர்களுக்கு சொல்லிக்கொள்ளவது என்னவென்றால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடக்கத்தில் உணவின்றி, உறக்கமின்றி கடினமாக உழைக்கும் போது, புத்தாக்கத்தின் உத்வேகம், சிறப்பு சரியான நேரத்தில் நம்முடன் வரும்.

நம்முடைய நாட்டில் ஆய்வுப் பணி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு செழுமையான சூழியல் முறையை உருவாக்கப் பணியாற்றி வருகிறோம். அடல் இன்ங்குபேஷன் மையம் ஏராளமான மையங்களை உருவாக்கி வருகிறது. அடுத்ததாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சந்தையைத் தேடுவதுதான். உங்களின் கடின உழைப்பு சாத்தியமில்லாததை சாதித்துக் காட்டும். உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த வாய்ப்புகள் அனைவருக்கும் எளிதானது அல்ல. கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். சவால்களை எப்போதும் வைத்திருங்கள். இதுதான் உங்களைச் சிறப்பானவர்களாக மாற்றும்.

நீங்கள் எங்கு பணியாற்றுகிறீர்கள், எங்கு வசிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, மனதை ஒருமுக மாக வைத்து, தாய்நாட்டின் தேவையை அறிந்து, பிறந்த மண்ணின் தேவையை உணர்ந்து பணி செய்வதுதான். நம்முடையய பணி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் எப்படி நம்முடைய தாய்நாட்டுக்குப் பயன்படும் என்பதைச் சிந்தியுங்கள். இது உங்களின் சமூகப் பொறுப்பும் கூட

இன்று சமூகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நிராகரித்து வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, அதே பயன்பாடு உடைய, ஆனால், பாதகமான அம்சங்கள் இல்லாதவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களைத்தான் நாங்கள் இதற்காக எதிர்நோக்கி இருக்கிறோம்.

சுவாமி விவகானந்தர் கூறியதைப் போல், இருவகையான மக்கள் இருக்கிறார்கள். என்றும் வாழ்கிறவர்கள், வாழ்ந்துவிட்டுச் சென்றவர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக வாழ்கிறவர்கள்தான் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள்”.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி சிறப்பித்தார்.