விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை: மத்தியஅரசு, தமிழக அரசு விளக்கம்

சென்னை:

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் பரிந்துரைக்கும் குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக அரசும் விளக்கம் அளித்துள்ளன.

குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ்மொழி தவிர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளதை தொடர்ந்து மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

தமிழ்மொழிக்கான செவ்வியல் விருதுகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 8 விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, தொல்காப்பியர் விருது, ஓர் இந்தியருக்கு வழங்கப்படுகிறது. குறள்பீடம் விருது வெளிநாடுவாழ் இந்தியர், வெளிநாட்டவர் என இருவருக்கு அளிக்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, இளம் அறிஞர்களுக்கான 5 விருதுகளும் வழங்கப்படுகின்றன. இவற்றில் முதல் 3 விருதுகளுடன் ரூ.5 லட்சமும், மற்ற 5 விருதுகளுடன் ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு மத்தியஅரசின் உள்துறை அமைச்சகமும், தமிழக அரசு சார்பிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

உள்துறைஅமைச்சகம்  விளக்கம்

விருதுகள் வழங்குவதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படவில்லை என்றும்,   தொல்காப்பியர் விருது ஒருவருக்கும், குரல் பீடம் விருது 2 பேருக்கும், இளம்தமிழ் அறிஞர்கள் விருது 5 பேருக்கும் என வழங்கப்படுவதாக விளக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு கடந்த ஆண்டில் இருந்துதான் தலா 4 விருதுகள் வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விளக்கம்:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் தொல்காப்பியர் விருது ஒருவருக்கும், குறள் பீட விருது இருவருக்கும், இளம் அறிஞர் விருது ஐந்து பேருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2005 முதல் 2016 வரை 66 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது மட்டுமின்றி தன்னாட்சி அளிக்கப்பெற்ற செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டு வரும் வேளையில், இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி