அமெரிக்காவில் உயர்ந்த கவுரவத்தைப் பெற்ற தமிழர்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பான தேசிய அறிவியல் வாரியத்தின் தலைவராக தமிழரான சுதர்சனம் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்பு, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளவில் புகழ்பெற்ற ஒரு அமைப்பாகும். இந்தப் புதிய உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்தார்.

தமிழகத்தின் கோவையிலுள்ள பிஎஸ்ஜி தொழிநுட்ப கல்லூரியில் 1986ம் ஆண்டு பொறியியல் முடித்த இவர், 1988ம் ஆண்டு சென்னை ஐஐடி -யில் தொழில்துறை உலோகவியலில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தற்போது ப்ரெடிசென் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஆகவும், ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் தலைவராகவும் உள்ளார். மேம்பட்ட உற்பத்தி, சேர்க்கை உற்பத்தி, உலோகவியல் போன்ற பொறியியல் பிரிவுகளில் 21 வருடங்கள் அனுபவம் கொண்டவர்.

சுதர்னசம் பாபுவை 6 ஆண்டுகளுக்கு தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் வாரியத்தின் மூன்றாவது அமெரிக்க இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சேதுராமன் பஞ்சநாதன், சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய இருவரும் அந்த வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.