சென்னை: தமிழ் வழியில் பயின்ற மாணாக்கர்களுக்கான, வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்பு மேற்கொள்வது தொடர்பான சலுகைகளில் திருத்தம் செய்யப்பட்டதால், தற்போது பள்ளிகளில் தமிழ்வழியில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு, அரசு பணிகளில் 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான சட்டம், ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வெறும் பட்டப் படிப்பு மட்டும் தமிழில் படித்தால் போதாது; ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, கட்டாயம் தமிழில் படித்திருக்க வேண்டும் என்று திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழ் வழியில் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணாக்கர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், ஆங்கில வழியில் இருந்து பல மாணாக்கர்கள் ஆறாம் வகுப்பில், தமிழ் வழிக்கு மாற துவங்கியுள்ளனர். புதிதாக, ஒன்றாம் வகுப்பில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரும், தமிழ் வழியில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க முன்வந்துள்ளனர்.

மருத்துவ படிப்பில், 7.5% இடஒதுக்கீடு வழங்குவதால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, ஆறாம் வகுப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.