ஆபத்தான “ப்ளூ வேல்” விளையாட்டை அடிப்படையாக வைத்து உருவாகும் தமிழ்த்திரைப்படம்

--

லகம் முழுதும் சிறுவர்கள் பலரது உயிரைப் பறித்த ப்ளூவேல் என்கிற ஆபத்தான விளையாட்டை  மையமாக வைத்து தமிழ்த்திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

அண்ணைக்காலமாக தமிழில் தரமான நல்ல படங்கள் பல வெளியாகத்துவங்கியிருக்கின்றன. வழக்கமான காதல், மோதல், என்றில்லாமல் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களுடன் வருகிறார்கள் இயக்குநர்கள். அவை மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் உலகையே அதிரவைத்த ஆபத்தான ப்ளூ வேல் விளையாட்டை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் ரங்கநாதன். இவர் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல இயக்குநர்களிடம்  உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

உலக அளவில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது இந்த  ப்ளூ வேல். விளையாட்டு. சிறுவர்களை குறிவைத்து வந்த இந்த விளையாட்டு ஆரம்பத்தில் ஆர்வத்தைத் தூண்டும். பிறகு மெல்ல மெல்ல அவர்களை அடிமைப்படுத்தும்.  விளையாட்டில் சொல்லப்படும் டாஸ்க்குகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். “ உயரமான கட்டிடத்தில் ஏறி கீழே குதி”, “கையை கத்தியால் அறுத்துக்கொள்” என்றெல்லாம் டாஸ்க் இருக்கும். இதைப் பின்பற்ற மரணத்தைத் தழுவிய சிறுவர்கள் ஏராளம்.

இந்த விளையாட்டை மையமாக வைத்து   திரைப்படம் இயக்குவதற்கான காரணத்தை ரங்கநாதன் தெரிவித்தார்.

“இன்றைய சூழலில் பணத் தேவைக்காக பெற்றோர் இருவருமே  வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுடன் அவர்கள் செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவாக உள்ளது. தவிர முன்பு போல கூட்டுக்குடும்பங்கள் இப்போது இல்லை. அந்தக்காலத்தல் பெற்றோரை விட தாத்தா, பாட்டிகள் குழந்தைகளை கவனித்துக்கொள்வார்கள். இப்போது அப்படி இல்லை.

குடும்பத்தில் குழந்தைகளும் தங்களது விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாததால் அவர்கள் தனிமையில் சோர்ந்து போகின்றனர். இதனால் அவர்கள் கவனம்  ப்ளூ வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளின் பக்கம்  திரும்புகிறது. இது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.

இந்த மாதிரியான விளையாட்டுகளில் குற்றவாளிகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். அந்த அடிப்படையிலேயே இந்தப் படத்தை உருவாக்கி வருகிறேன்” என்று கூறினார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா, “இளம் வயது மாணவன் ஒருவன் காணமல் போய்விடுகிறான். அவன் ப்ளூ வேல் விளையாடினான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.

மனதளவில் குழந்தைகள் எப்படி இந்த விளையாட்டுக்குள் இழுக்கப்படுகின்றனர் என்பதையும் பெற்றோர்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்பதையும் இந்தத் திரைப்படம் சொல்கிறது” என்றார்.