பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 360 பேரை காணவில்லையாம்…. தேடுகிறது தமிழகஅரசு

சென்னை: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை  மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில்,  பிரிட்டனில் இருந்து  தமிழகம் திரும்பியவர்களில் 360 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி வருகிறது.  இதை தடுக்கும் நோக்கில் உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.  கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை இந்தியா திரும்பியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதுடன், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நவம்பர் 21 முதல்  தமிழகத்துக்கு இங்கிலாந்தில் இருந்து சுமார் 2,300 நோயாளிகள் மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர், அவர்களில் 1,936 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.  50 பேர் மீண்டும் பிரிட்டன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 360 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை.  அவர்கள் அனைவரும் சென்னை மற்றும் செங்கல்பேட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முகவரிகளை மாற்றிக்கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழகம் திரும்பியவர்களுக்கு  ஆர்டி-பி.சி.ஆர் முறையால் சோதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 24 பேர் மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 1,853 பேர் கொரோனா இல்லை என்றும், இன்னும்  59 முடிவுகள் வெளியாகவில்லை. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து  44 கோவிட் நோயாளிகளின் மாதிரிகள் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன,  அதில், இதுவரை  இரண்டு சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சென்னையைச் சேர்ந்த நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மற்றொரு நபரான மதுரைச் சேர்ந்த நபருக்கு உருமாறிய கொரோனா இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.