தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் நடப்பாண்டில் கூடுதலாக 161 முதுநிலை இடங்கள்….

சென்னை:

மிழகத்தில் உள்ள  அரசு மருத்துவக் கல்லூரிகளில்  நடப்பாண்டில் கூடுதலாக 161 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.


நடப்பாண்டில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள மருத்துவ முதுநிலை படிப்பில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 161 இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில்ஒப்புதல் வழங்கி உள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஆர்.நாராயண பாபு தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கான இடங்கள்  1,919 ஆக உயர்ந்து உள்ளது என்று கூறியவர்,  தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு1250 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு (2019) கூடுதலாக 508 இடங்களுக்கு அதாவது 40 சதவிகிதம்  அனுமதி வழக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு 1758 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

நடப்பாண்டில் மேலும் 161 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மாணவர்களுக்கான இடங்கள்  1,919 ஆக அதிகரித்து உள்ளது என்றும், எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, கதிரியக்கவியல் மற்றும் மயக்க மருந்துக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.