சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற வேண்டிய நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான தேர்தல்கள் அதிகாரிகள் இன்று தமிழக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  அப்போது, திமுக, அதிமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்டுகிறது.

தமிழகத்தில் நடைபெற உள்ள  சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இன்று முற்பகல் ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, மற்றும் சிபிஎம் சார்பில் டி.கே ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக்கட்சியினரும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 திமுக

இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க சார்பில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தி.மு.க சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி எம்.பி., “தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையரிடம் ஏற்கனவே 6 மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை அதற்கு பதில் வரவில்லை. ஆனால் அ.தி.மு.கவின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் வருகிறது. இது ஒரு தலைபட்சமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினோம். அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக தி.மு.கவின் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு உத்தரவிட்டார்கள்.

மாதவரம் தொகுதியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு எந்த வித பாதுகாப்பும் இன்றி உள்ளதால் கதவுகள் உடைந்து இயந்திரங்கள் உடைக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினோம். நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை. குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில், 522 காவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தக் கூடும் என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

அரசுப் பணத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், சட்டப்பிரிவினருடன் இணைந்து தி.மு.க சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். எந்த நேரத்தில் தேர்தல் வைத்தாலும் தேர்தலைச் சந்திக்க தி.மு.க தயாராக உள்ளது.

அமைச்சர் வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதியில், இரண்டு பூத்துகளை சிங்காநல்லூர் பகுதியில் வைத்துள்ளனர். அதில் உள்நோக்கம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

  அதிமுக 

அதிமுக சார்பில், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். அவர்களது மனுவில்,   ஏப்ரல் மாதம் நான்காவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும், 80  வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பதை வரவேற்கிறோம் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

 காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ் கமிட்டி  சார்பில் பங்கேற்ற ஆர்.தாமோதரன் கூறும்போது,  80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வும்,. ஏனென்றால் இது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு போட வழிவகுத்து விடும். எனவே 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டுகளை அறிமுகப்படுத்த கூடாது. தமிழகத்தில் தேர்தலை ஒரே தேதியில் நடத்த வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் 10 நாட்களுக்குள் ஓட்டுக்களை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும். நீண்ட நாள் காத்திருக்கும் சூழ்நிலையை உருவாக்க கூடாது. அதற்கேற்ப தேர்தல் அட்டவணையை தயாரிக்க வேண்டும்.

 சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 56 ஆயிரத்து 300 பேரை நீக்கி இருக்கிறார்கள். 90 ஆயிரத்து 479 பேரை புதிதாக சேர்த்து இருக்கிறார்கள். இதில் குளறுபடி இருப்பதாக கடந்த முறையே நாங்கள் புகார் செய்தோம். ஆனால் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரம் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

243 தொகுதிகளுக்கும் வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் கமி‌ஷன் தடுத்து நிறுத்த வேண்டும். கோடைகாலமாக இருப்பதால் ஓட்டு சாவடியில் சாமியானா பந்தல், குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். கொரோனா கால சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து வாக்காளர்களுக்கு கிருமி நாசினி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

 இதே போல் மற்ற கட்சி பிரதிநிதிகளும் தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தேர்தல் ஆணையர்களிடம் அதிமுக, திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் கமி‌ஷனர் ஆலோசனை நடத்துகிறார்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தலுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது? பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகள், ஓட்டு பெட்டிகளின் எண்ணிக்கை, ஓட்டு பதிவுக்கான வாக்குச்சாவடிகள், பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் எவ்வளவு? அதற்கான கூடுதல் பாதுகாப்புகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தேர்தலின் போது துணை ராணுவப்படை வீரர்கள் எவ்வளவு பேர் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுவார்கள் என்பது குறித்தும் கேட்டு அறிகிறார்.

நாளை (11-ந்தேதி) காலை 10 மணிக்கு வருமான வரித்துறை மற்றும் வங்கி உயர் அதிகாரிகளை வர வழைத்து பல்வேறு தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறார்.

காலை 11 மணிக்கு தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.

அதன் பிறகு மதியம் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது தேர்தலுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்ற விவரங்களை விரிவாக தெரிவிக்கிறார்.