பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல்? இல.கணேசன்

மதுரை,

மிழக அரசு கலைக்கப்பட மாட்டாது. நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.

நடிகர் கமலஹாசன் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்து தீவிரவாதம்  இல்லை என்று கூறமுடியாது என்று கூறியது குறித்து கூறும்போது, “இந்து தீவிரவாதம்” என்ற சொல் ‘சூடான ஐஸ்கிரீம்‘ போன்றது,  நடிகர் கமலஹாசன் இந்த சொல்லை பயன்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

நடிகர் கமலஹாசனின் இந்து தீவிரவாதம் என்ற  கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு பாரதியஜனதா மற்றும் இந்துத்துவா தலைவர்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது,

ஜெயலலிதா இறந்த பின்பு வெற்றிடத்தை நிரப்ப பலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அதை நிரப்ப முடியவில்லை. திரைப்படத்துறையில் இருந்தும் அந்த வெற்றிடத்தை நிரப்ப பலர் முயற்சி செய்கிறார்கள்.

ஒரு வி‌ஷயத்தில் கருத்து தெரிவிப்பது என்பது நடைமுறையில் உள்ளது. அதற்கு மாற்று கருத்து தெரிவிப்பதும் சகஜம்தான். இதில் சகிப்புத்தன்மை முக்கியம்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அடுத்து “இந்து தீவிரவாதம்” என்ற வார்த்தையை நடிகர் கமல்ஹாசன் பயன்படுத்தி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு கமல்ஹாசன் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

“இந்து தீவிரவாதம்” என்ற சொல் ‘சூடான ஐஸ்கிரீம்‘ என்ற வார்த்தையைபோல ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது ஆகும். இந்து சமயம் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளாது.

ஊழல் மிகுந்த தமிழக அரசை பின்னால் இருந்து பா.ஜனதா இயக்குகிறது என்பது பொருத்தமற்றது, கற்பனையானது. ஊழல் அற்ற அரசுதான், நேர்மையான அரசுதான் பா.ஜனதா அரசு. அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்தியில் பா.ஜனதா தான் ஆட்சியில் இருக்கும்.

வருகிற டிசம்பருக்குள் தமிழக அரசு கலைக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருப்பது, அவரது சொந்த கருத்தாகும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.