நாகை: மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தில்,  ஆணவத்தோடு பாஜக தலைவர் முருகன் பேசி வருகிறார் என சிபிஎம் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,  மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களை  திரும்பப் பெற வலியுறுத்தி  நவம்பர் 25ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், கொரோனா பரவலை தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன என குற்றம் சாட்டியவர்,  ”வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து, பொன். ராதாகிருஷ்ணன் திமுகவோடும், பாஜக தலைவர் முருகன் அதிமுகவோடும், ஹெஜ்.ராஜா மத்திய தலைமை முடிவு எடுக்கும் எனவும், வானதி சீனிவாசன் புதிய கட்சியோடு கூட்டணி என்றும் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை குழப்பி வருகின்றனர்.   பாஜக கை நீட்டும் கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் கூறுகிறார்,  ”மத்தியில் பாஜக அதிகாரத்திலிருக்கும் ஆணவத்தோடு பாஜக தலைவர் முருகன் பேசியுள்ளார், ஆனால், . தமிழ்நாட்டில் பாஜக தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
”அதிமுகவை மிரட்டுவதற்கே பாஜக தலைவர் முருகன் இதுபோன்று பேசி வருகிறார்” என்றும் தெரிவித்தார்.