தமிழக அமைச்சரவை கூட்டம்: நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு!

சென்னை,

லைமைசெயலகத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகல் 3 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் சுமார் 4 மணி அளவில் முடிவடைந்தது.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வரும் 14ந்தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட்ட கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்னைகள், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், ஜி.எஸ்.டி மசோதா, விவசாய பிரச்னைகள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் வரை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு  அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கடந்த  2012-ம் ஆண்டு நிலப்பதிவுக்கான வழிகாட்டு மதிப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், பத்திரப்பதிவு குறைந்து, அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு காரணமாக  ரியல் எஸ்டேட் தொழில் கடுமையான சரிவை சந்தித்தது.

இதன் காரணமாக  கடந்த ஓராண்டில் மட்டும் அரசுக்கு 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றபின், அவரது தலைமையில் நடக்கும் 5வது அமைச்சரவை கூட்டம் இது.

டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாக சந்தித்து வரும் இந்த சூழலில்,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.