கஜா புயல் பாதிப்பு: முதல்வர் எடப்பாடி நாளை இரவு ரயில்மூலம் திருவாரூர் பயணம்

சென்னை:

ஜா புயல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை கடந்த 20ந்தேதி முதல்வரும், துணை முதல்வரும் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு நடத்தினர். அப்போது தொடர்ந்து மழைபெய்ததால், ஆய்வை நிறுத்திவிட்டு சென்னை திரும்பினர்.

இந்த நிலையில், மீண்டும் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு நடத்த முதல்வர் செல்ல இருப்ப தாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் இருந்து நாளை இரவு ரெயில் மூலம் திருவாரூர் சென்று அங்கிருந்து கார் மூலம் ஆய்வுக்கு செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கடந்த 15ந்தேதி முதல் கனமழையை கொட்டிய நிலையில் 16-ம் தேதி அதிகாலை வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. அப்போது 120  தல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்று மற்றும் கனத்த மழை காரணமாக  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் உள்பட 10 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

அதையடுத்து நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், கடந்த 20-ம்தேதி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பார்வையிட்டனர். அவர்களுடன்  தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பாஸ்கரன் ஆகியோரும் சென்றனர்.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சை பகுதிகளில்  ஆய்வு செய்தபோது, மீண்டும் கனமழை பெய்த தால், ஆய்வை நிறுத்தி விட்டு முதல்வர் சென்னை திரும்பினார். தொடர்ந்து மறுநாள் டில்லி சென்று பிரதமரை சந்தித்து நிவாரண நிதியாக  15 ஆயிரம் கோடிவழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முதல்வரின் கஜா புயல் பார்வையிடுவது ரத்து செய்யப்பட்டதை தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. மேலும் ஹெலிகாப்டர் பயணத்திற்கும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுபட்ட இடங்களை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் செல்கிறார்.நாளை இரவு ரெயில் மூலம் புறப்படும் முதல்வர் நாளை மறுநாள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார்.