புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு!

புதுக்கோட்டை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை  புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்,

கஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  மாப்பிளையார் குளம் பகுதியில் பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

புயலால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில கிராமங்களுக்கு இன்னும் நிவாரண பணிகள் கிடைப்பதில் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கஜா புயலின் காரணமாக ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சேதத்தை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி இன்று புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இன்று காலை முதலே புதுக்கோட்டை பகுதியில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு வரும் நிலையில்,  தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தினை பார்வையிட உள்ளார்.

முன்னதாக இன்று   காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற அவர் பின்னர் அங்கிருந்து ஹெலிக்காப்டர் மார்கமாக புதுக்கோட்டை சென்றடைந்தார்.

அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டையின் மச்சுவாடி, மாப்பிளையார் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகள் முதல்வருக்கு புயல் சேதம் பற்றி விளக்கம் அளித்தனர்.  அவருடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள்  உடன் இருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல் நிவாரண நிதி வழங்கு அவர்களுக்கு ஆறுதல் அளித்தனர்.

கஜா புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.