3,501 நகரும் நியாய விலைக்கடைகளை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, 3,501 நகரும் நியாய விலைக்கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  தொடங்கி வைத்தார்.

ரேசன் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் வகையில், நடமாடும் ரேசன் கடைகளை தமிழகஅரசு இன்று தொடங்கி உள்ளது.

ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில்,   மானியக்கோரிக்கை விவாதத்தின் போது அறிவித்தபடி,  9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 ஆயிரத்து 501 நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நகரும் கடைகள் அனைத்தும், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  இன்று முதல் சேவையை தொடங்குகின்றன.

இந்த திட்டத்தின் மூலமாக 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இத்துடன்,   குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக மின்சாரம் மற்றும் மின்சக்தியில் இயங்கக் கூடிய ஆட்டோக்களையும் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தபடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.