பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். தற்போது உள்ள அரசியல் சூழல் குறித்தும், எயிம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருடன் பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Edappadi

கடந்த ஒருசில மாதங்களாக தமிழக அரசியல் சூழல் அமையாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் தற்போது தொடங்கி உள்ள பருவமழை மற்றும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணி உள்ளிட்டவைகள் என பலப்பிரச்சனைகள் தலைத்தூக்கியுள்ளன.

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6.30 மணி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிப் புறப்பட உள்ளார். அதன்பின்னார் நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி 5 இடங்களை ஆய்வு செய்தது. இறுதியாக மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கியது.

ஆனால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்தது. இதுபற்றி பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் பிரதமரை சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து வலியுறுத்துவேன் என்று கூறி இருந்தார்.

அதன்படி பிரதமர் மோடியை நாளை காலை எடப்பாடி பழனிசாமி சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளார். இது தவிர தமிழகத்துக்கு தர வேண்டிய பல்வேறு நிலுவை தொகையை விரைந்து ஒதுக்கும்படி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்கும்படி ஏற்கனவே தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாகவும் பிரதமரிடம் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பு தொடர்பாகவும் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி பிரதமரிடம் அவர் விளக்க உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் டி.டி.வி. தினகரனை ரகசியமாக சென்று பார்த்த விவகாரம் உள்பட பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்தும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார்.