சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காலை தலைமைச்செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,  தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை கொரோனா தொற்று இருப்பதாக 67 பேருக்கு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

அதன்படி, ஈரோட்டில் -10 பேரும், சென்னையில் -4 பேரும், மதுரையில் -1 மற்றும் திருவாரூர் -1, கருர் – 1 ஆகியோர் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்துள்ளவர்,  கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் வீடுகளில்  தனிமைப்படுத் தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் தேவையில்லை என்று கூறிய முதல்வர், தமிழகஅரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 1,49,347 தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு  நிறுவனங்களில்  பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கி உள்ளது என்று கூறிய முதல்வர்,  தமிழகத்தில், இதுவரை 45,537 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர் என்றும் கூறினார்.

மேலும்,  பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேலும்,  1.5 கோடி முகமூடிகளை வாங்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.