நேற்று நடைபெற்ற  அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சசிகலா, தமிழ முதல்வராக தேரந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதையே இந்த நடவடிக்கைக் காட்டுகிறது. ஜனநாயக வரலாற்றில் இன்றைய நாள் ஒரு கருப்பு நாள் என்று தான் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளின்படி வழக்குகளில் தண்டிக்கப்படாத எவர் ஒருவரும் முதலமைச்சராக முடியும். அந்த வகையில் தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை சட்டத்தின்படி குறை சொல்ல முடியாது.

அதேநேரத்தில் மரபுகளின்படி பார்த்தால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சசிகலாவுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், தமிழக மக்களின் ஆதரவு இருப்பதாக தோன்றவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பரப்புரை செய்த ஜெயலலிதா, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து போட்டியிடுங்கள் என்று கூறித் தான் வாக்கு சேகரித்தார். 234 தொகுதிகளிலும் அதிமுகவினரை வேட்பாளர்களை அவர் நிறுத்தினார். அதிமுகவின் சாதாரணத் தொண்டனைக் கூட வேட்பாளராக நிறுத்திய ஜெயலலிதா, எந்த தொகுதியிலும் சசிகலாவை வேட்பாளராக நிறுத்தவில்லை.

இத்தகைய நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்வது தான் ஜனநாயக நெறிமுறைகளை மதிக்கும் செயலாகும். அதேபோல், தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தெடுக்கப்படாத சசிகலா முதலமைச்சர் பதவியை ஏற்க ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது.

கடந்த 2001&ஆம் ஆண்டு தேர்தலில் டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார். ஆனாலும், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாமலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், உடனே பதவி விலக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

அதுமட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரை முதலமைச்சராக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா கருத்து தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்வாகும் வரை முதலமைச்சர் பதவியை ஏற்காமல் சசிகலா காத்திருந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவை முதலமைச்சராக முன்னிறுத்தி வாக்குகளை பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் இப்போது சம்பந்தமே இல்லாத ஒருவரை முதலமைச்சராக்கியதன் மூலம் வாக்களித்த தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தமது மகனின் இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்க செல்லாமல் அரசுப் பணியாற்றிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பதவியில் இருந்த போது தனது தாயைக் கூட தன்னுடன் தங்க அனுமதிக்காக காமராஜர், சட்டை கிழிந்திருப்பது தெரிந்து விடக் கூடாது என்பதற்காக தோளில் துண்டு போட்டு மறைத்த அறிஞர் அண்ணா ஆகியோர் அமர்ந்திருந்த நாற்காலியில், ஏராளமான அமலாக்கப்பிரிவு வழக்குகளையும், சொத்துக்குவிப்பு வழக்குகளையும் எதிர்கொண்டு வரும் சசிகலா அமரப் போகிறார் என்பதை நினைக்கும் போதே தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும், பதற்றமும் தான் ஆட்டிப் படைக்கிறது.

1991-96 காலத்தில் ஆட்டம் போட்டது போல சசிகலாவின் உறவினர்கள் இனி அட்டகாசம் செய்வார்கள். அவர்களின் கண்களை உறுத்திய கட்டிடங்களும், தொழில் நிறுவனங்களும் மிரட்டிப் பறிக்கப்படும். எதிர்த்துக் கேட்பவர்கள் அடித்து நொறுக்கப்படுவார்கள். இதற்கான தலையெழுத்து தான் இன்று எழுதப்பட்டிருக்கிறது. தமிழகத்தை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற நிலையில் மக்கள் தான் இனி தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்காவது முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்” இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் நடிகர் ரஜினியின் வார்த்தைகளை ராமதாஸ் கையாண்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, “மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை அந்த ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

“ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்ற அந்த வார்த்தைகள் இன்றுவரை மிகப்பிரலமாக உலவிவருகிறது.

ரஜினியின் மறைமுக அரசியல், திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது, பெண்களுக்கு எதிரான வசனங்கள் போன்றவற்றை வெளிப்படையாக கடுமையாக கண்டித்துவந்தவர்கள் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்தான்.