சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய தமிழக முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மத்தியஅரசிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

`சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.314 கோடி என ஐந்து ஆண்டுகளில் ரூ.1,570 கோடியை திரட்ட முடியும் என்றும்,  இதற்கான நிதியைப் பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடியும்’ என்று துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தரே, மாநில அரசின் அனுமதியின்றி, நேரடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. `இதனால் இட ஒதுக்கீடு பாதிக்கும்’ என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டன.

இதற்கு பதிலளித்த சூரப்பா, `இட ஒதுக்கீடு பிரச்னை வந்தபோது அது பற்றி விளக்கம் கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினேன். அதற்கு மத்திய அரசு அனுப்பிய பதில் கடிதத்தில், மாநில அரசின் சட்டத்தின்படி எது பின்பற்றப்படுகிறதோ அதற்கு எந்தத் தடையும் இல்லை எனக் கூறிவிட்டனர்’ எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்திய நிலையில், திமுக போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது. அதுபோல அதிமுகவும் சூரப்பா மீது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளதுடன், சிறப்பு அந்தஸ்தே தேவையில்லை என்று தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய தமிழகஅரசு மத்தியஅரவை வலியுறுத்த வேண்டும் என டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவரது டிவிட்டில், திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு #IoE தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும். #DismissSurappa என @CMOTamilNadu பரிந்துரைக்க வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.