சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில், அதாவது நவம்பர்-டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, உள்ளாட்சிக்கான நிதியை விடுவிக்க கோரியுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தேர்தல் குறித்து திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி வார்டுகள் பிரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 3 ஆண்டு தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சி கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,18,974 ஊரக உள்ளாட்சி மற்றும் 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகள் உள்ளன. இதற்கான வாக்குப்பதிவுக்கு பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடியும், 1200 முதல் 2400 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2400 பேருக்கு மேல் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும்,   மாநகராட்சிகளில் 1400 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடி களும் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளது.

மாநில தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி மாநிலம் முழுவதும் 92,771 வாக்குச் சாவடிகளில் இந்தத் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

மேலும், நேற்று  தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலாவிடம் 2017-18 முதல் நிலுவையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ .1196.29 கோடி மற்றும் ரூ. 3780.81 கோடி  செயல்திறன் மற்றும் அடிப்படை மானியங்களை முன்கூட்டியே வெளியிடக் கோரி மனு கொடுத்துள்ளார்.

மேலும், மத்திய கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சருடன் தனது சந்திப்பின் போது, ​​வேலுமணி, மாநிலத்தில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி தேவைப்படுவதாக தெரிவித்தார்.

“மையத்திலிருந்து மானியங்கள் பெறாதது மாநிலத்தில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடுமையான நிதி தடைகளை ஏற்படுத்தி வருகிறது, மேலும் அடிப்படை வசதிகளை பராமரிக்கும் திறனை தடை செய்கிறது” என்று வேலுமணி கூறி, நிதி உதவியை கேட்டுள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.