கஜா புயல் பாதிப்பு: நன்கொடை வழங்க தனியார் நிறுவனங்களுக்கு எடப்பாடி வேண்டுகோள்

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘கஜா’ புயலால் வாழ்வாதாரங்களை இழந்த மக்களின் நிலைமையை சரிசெய்யவும், பாதிக்கப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தமிழக அரசு எடுத்து வரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டுகிறேன்.

அதன்படி, அரசு துணை செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமை செயலகம் சென்னை-9, தமிழ்நாடு, இந்தியா (மின்னஞ்சல் முகவரி: dspaycell.findpt@tn.gov.in) என்ற முகவரியில் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வரைவோலை மூலமாக அனுப்பலாம்.

அதேபோன்று, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை செயலகம் கிளை, சென்னை-9, சேமிப்பு கணக்கு எண் – 117201000000070, IFS Code – IOBA0001172, CMPRF – AAAGC0038F என்ற வங்கிக்கும் நேரடியாக அனுப்பலாம்.

நன்கொடை அனுப்புபவர்களுக்கு உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும், நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G)ன் கீழ் 100 சதவிகிதம் வரிவிலக்கு வழங்கப்படும். வெளிநாட்டு வாழ் மக்களிடம் இருந்தும் நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது.

அவர்கள், SWIFT Codeஐ பின்பற்றி IOBINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai என்ற முகவரிக்கு அனுப்பலாம். ரூ.10 லட்சத்திற்கும் மேல் நன்கொடை வழங்க விரும்புவோர் அனுமதி பெற்று, என்னை (முதல்வரை) சந்தித்து நிதி வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.