சிறப்பு வேளாண் மண்டலம் மசோதா தாக்கல்: விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார் எடப்பபாடி….

சென்னை:

காவிரி டெல்டா பகுதிகள் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தாக்கல் செய்தார். இது விவசாயிகளிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி, காவிரி டெல்டாபகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அதற்கான மசோதா தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று  தமிழக பட்ஜெட் கூட்டத்தின் இறுதிநாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கடையில்,  காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும்  சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார்.

அப்போது,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வோளாண் மண்டல மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து பேசினார். ஒரு விவசாயியாக இதனை தாக்கல் செய்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்ட முன்வடிவு மூலமாக, ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக் குத் தடை விதிக்கப்படுகிறது

ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது .

மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இதன் கீழ் வருகிறது. காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களுக்கும், அதேபோன்று அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்த தடை பொருந்தும் என்றும் கூறினார்.

அதேபோல் டெல்டா மாவட்டங்களில், தோல் பதனிடும் ஆலைகள், கப்பல் உடைக்கும் ஆலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி அந்த தொழில்களை நடத்தினால் 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் தண்டனை விதிக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும்  குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்படும் ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்கள் பாதிக்கப்படாது என்றும், குழாய் இணைப்பு, சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு பாதிக்கலாகாது என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, இதற்காக தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் எனவும் இந்த அதிகார அமைப்பு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற தமிழக அமைச்சரவ கூட்டத்தில், காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.