சென்னை: தமிழகத்தில் முகாமிட்டுள்ள  தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவ்  நேற்று (24.09.2020) காலை தமிழகம் வந்ததார். சென்னை  விமானநிலையத்தில் அவருக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துடன், காலை 11 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்ந்து, சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸின் முன்னணி அமைப்புகள் மற்றும் இதர துறைகள் சார்ந்த தலைவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்கள், சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், 2021 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இன்று (25 ஆம் தேதி)  காலை தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

முன்னதாக இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமயகமான அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.  தினேஷ் குண்டுராவை ஸ்டாலின் எழுந்து சென்று வரவேற்றார்.

இந்தசந்திப்பின்போது  கழக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன்  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு MP, முதன்மை செயலாளர் கே.என். நேரு உடன் இருந்தனர்.  மேலும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்பட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.