புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக தமிழக காங்கிரஸ் ரூ. 1கோடி வழங்கும்… கே.எஸ்.அழகிரி

சென்னை:
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் வகையில், அவர்களின் பயணச் செலவுக்காக காங்கிரஸ் தலைமையின்அறிவுறுத்தலின்படி, மாநில அரசிடம் தமிழக காங்கிரஸ் கட்சி  ரூ. 1கோடி வழங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே வேலையுமின்றி, உண்ண உணவின்றி உறங்க இடமின்றி, வரப்பே தலையணையாய் – வைக்கோலே பஞ்சு மெத்தையாய் கடந்த 40நாட்களாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி சீரழிகிறார்கள்.

அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய ரயில்வே அமைச்சகம் பயணச்செலவுக்கான பணத்தை அவர்களிடம் கேட்கிறது. மாற்று உடையின்றி தவிக்கும் அவர்கள் பயணச் செலவுக்கான பணத்திற்கு எங்கே செல்வார்கள் என்கிற சிறு உண்மைக்கூட மத்திய அரசுக்குப் புலப்படவில்லை. மாநில அரசோ, இன்னும் அதனின் முடிவை தெரிவிக்கவில்லை.

எனவே இந்த கையறு நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி அதனுடய அறக்கட்டளையில் இருந்து ரூபாய் ஒரு கோடியை தமிழக முதலமைச்சரிடம் வழங்குவது என முடிவு செய்திருக்கிறது. இத்தொகையை வெளி மாநிலங்களில் இருக்கிற தமிழர்களை தமிழகம் கொண்டு வருவதற்கு மட்டும் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.