‘கருப்பர் கூட்டம்’ சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்… சைபர் கிரைம் அதிரடி…

சென்னை:
ந்துக்கடவுகளை இழிவுபடுத்தி வந்த ‘கருப்பர் கூட்டம்’ சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை இணைய தளத்தில் இருந்து  சைபர் கிரைம்  காவல்துறையினர் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்க்கடவுள் முருகனுக்கு உகந்த கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் என்ற சேனல் அமைப்பு. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கறுப்பர் கூட்டம் மீது ஏராளமான புகார்கள் பதியப்பட்டது. ஏற்கனவே இந்துமதத்தை இழிவுபடுத்தும் வகையில், பல்வேறு வீடியோக் களையும் அந்த அமைப்பினர் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து, ‘யு டியூப் சேனலை முடக்க வேண்டும்; மதக் கலவரத்தை துாண்ட முயற்சிக்கும், சேனல் நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பான புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கறுப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல், சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்தல் என, ஐந்து சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சேனலின் நிர்வாகி, செந்தில்வாசன், ; புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகி சுரேந்தர் நடராஜன்,  ஆகியோரை கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அந்த நிறுவனத்துக்கு காவல்துறை சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. அதைத்தொடர்ந்து,  கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும்’ என, அமெரிக்காவில் உள்ள, யு டியூப் நிறுவனத்திற்கு, மின்னஞ்சல் வாயிலாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.