சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கொதித்தெழுந்து உள்ளனர்.  மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று, 19வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

இன்றைய தினம், டெல்லி எல்லையில் உள்ள சாலைகளில் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர். லட்சக்கனக்கான விவசாயிகள் இந்த பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  இதனால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் நாடு தழுவிய அளவில் பட்டினிப் போராட்டம் மேற்கொள்வதாகவும் அறிவித்தனர். அதன்படி, சாலை மறியல் மற்றும்,  மத்திய அரசு மற்றும் பா.ஜ.க அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட  முடிவு செய்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகளில் 100 கம்பனி மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை  வள்ளுவர் கோட்டத்தில் டிசம்பர் 18ம் தேதி திமுக – கூட்டணி கட்சியின் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாள்களாக, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப் படுத்தி வருகிறது.

ஒட்டு மொத்த நாட்டு மக்களின் உணவுரிமைகளையும், உழுதுண்போரின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கண்ணியமாகப் போராடி வரும் தேசப் பற்றாளர்களான விவசாயப் பெருமக்களை அவமதித்திடும் வகையில் – அந்தப் போராட்டத்தில் “மாவோயிஸ்டுகள்” புகுந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மண்ணை வாரியிறைத்துப் பேசியிருப்பதற்கும்; மத்திய அமைச்சர்கள் பலரும் இது போன்ற அபத்தமான கருத்துகளை வெளியிட்டு வருவதற்கும்; தி.மு.க தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிகளின் மகத்தான போராட்டத்தை சரியாக மதிப்பிடாமல் அவமதித்துவரும் மத்திய பா.ஜ.க. அரசின் தவறான அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் – மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான கருத்தையும் கண்டிக்காமல் – இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியது மட்டுமின்றி கண்டனத்திற்கும் உரியது.

தலைநகர் தில்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உணர்வு பூர்வமாக தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு “குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” சட்டங்களையும், “இலவச மின்சாரத்தை ரத்து செய்ய” கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை.

இந்நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், உணவுப் பாதுகாப்பிற்கு அடித்தளமாகவும் விளங்கும் விவசாயிகளையும்- அவர்களின் உரிமைகளையும் புறக்கணித்து; தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்குடனும்- ஆணவப் பேச்சுக்களுடனும் இப்போராட்டத்தைக் கையாளும் மத்திய பா.ஜ.க. அரசினையும் – முதல்வர் பழனிச்சாமியையும் கண்டித்தும் – தில்லியில் கரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் – அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் – 18.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும்.

ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி, அறவழியில் விவசாயப் பெருமக்களுக்கு, தொடர்ந்து ஆதரவளிப்போம்! அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற எந்நாளும் துணை நிற்போம்!

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.