தேர்தல் பிரச்சாரத்துக்கு பணம் கொடுத்து அழைத்து வரும் அரசியல் கட்சிகள்

சென்னை:

அரசியல் தலைவர்களின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் நிலை இன்று அனைத்து கட்சிகளுக்குமே அவசியமான ஒன்றாகிப் போயிருக்கிறது.


ஒரு காலத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் பேச்சைக் கேட்க நீண்ட தொலைவு பயணித்து வந்தனர். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

பணமும், உணவும் கொடுத்து தலைவர்களின் பிரச்சார கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வர வேண்டியுள்ளது.

ஸ்மார்ட் போன் எல்லோரது கைகளிலும் வந்துவிட்ட நிலையில், பிரச்சாரத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. தங்கள் போனிலேயே பார்த்துக் கொள்கிறார்கள்.

இதனால் அரசியல் கூட்டங்களுக்கு கூட்டத்தை திரட்டுவது கடினமாகிவிட்டது. அதிமுக மற்றும் திமுகவினர் கூட, தங்கள் தலைவர்களின் கூட்டத்தில் சேர்களை நிரப்ப படாதபாடு படுகின்றனர்.

இதற்காக அரசியல் கட்சியினர் பெண்கள் சுய உதவிக்குழுவினர், விவசாய தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், தினக் கூலி தொழிலாளர்களை நாடுகின்றனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்படுவோருக்கு ரூ. 200 முதல் 400 வரை வழங்கப்படுகிறது. கூட்டம் திரட்டுவதற்காக அரசியல் கட்சிகள் ரூ.50 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை செலவழிக்கின்றனர்.

அழைத்து வந்து திரும்ப கொண்டு விட வாகனங்களையும் அமர்த்துகின்றனர்.
தேர்தல் நேரத்தில் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள், ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவோர் சரியாக பணிக்கு செல்வதில்லை.

இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் பெற்று விடுகின்றனர்.

கிராமப்புறங்களில் தலைவர்கள் பிரச்சாரத்துக்கு செல்வோருக்கு ரூ.100, சிறு நகரங்களில் ரூ.200, பெரு நகரங்களில் ரூ.300 வழங்கப்படுகிறது.

கிராமப்புற பொதுக் கூட்டங்களுக்கு ரூ.100-200, சிறு நகர பொதுக்கூட்டங்களுக்கு ரூ.200-300, பெரு நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கு ரூ.300-500 வழங்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.