போலி ஹோமியோபதி கல்லூரி: சென்னையில் முன்னாள் ஐஏஎஃப் அதிகாரி உள்பட 3 பேர் கைது

சென்னை:

ருத்துவப் படிப்புகளில் ஒன்றான ஹோமியோபதி மருத்துவம் என்று  போலியாக கல்வி நிறுவனம் நடத்தி வந்த முன்னாள் விமானப்படை அதிகாரி உள்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் போலியான   ஹோமியோபதி கல்வி நிறுவனம் மூலம் போலி சான்றிதழ் வழங்கப்படுவதாக, தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பதிவாளர் ஆவுடையப்பன் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் எதிரே  ஜி கே கனக திருமேனி என்பவர்  மாற்று ஓமியோபதி மருத்துவம் என்ற பெயரில் வகுப்புகள் நடத்தி பலருக்கும் போலி சான்றிதழ் கொடுக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அங்கு திடீரென காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில்,திருமேனி போலியாக ஹோமியோபதி கல்லூரி நடத்தி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான போலி சான்றிதழ்களும் கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த கல்வி நிறுவனத்தை நடத்திய, கனக திருமேனி,அவரது சகோதரர் கனக ஞானகுரு, கூட்டாளி பார்த்திபன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கனக திருமேணி, முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரி என்பது தெரிய வந்தது. இவர்கள் ஹோமியோபதி என்ற பெயரில்  ஒரு நாள் மட்டும் கோர்ஸ் நடத்தி தலா 5 ஆயிரத்து 500 ரூபாய் பணம் வசூல் செய்து போலி சான்றிதழ் வழங்கியது தெரியவந்துள்ளது. இவர்கள் இதுபோன்ற பலமுறை ஒருநாள் வகுப்பு என்ற பெயரில் போலி சான்றிதழை வழங்கி பணத்தை வாரி குவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.