Random image

தமிழக நிதிநிலையை சரி செய்ய 3 ஆண்டுகள் தேவைப்படும்! நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

சென்னை: தேர்தலுக்கு பின் எந்த அரசு ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தின்  நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்  தமிழக நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக  நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,

தமிழகத்தின் நிதிநிலைமை  சரிசெய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்றவர், தேர்தலுக்கு பின் எந்த அரசு  ஆட்சி அமைத்தாலும் இதுதான் நிலைமை என்று கூறினார்.

தமிழகத் தேவைக்கு கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை என்று கூறியவர்,  நடப்பாண்டில் தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது,  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.02%ஆக இருக்கும் என்றவர், .தமிழக அரசு அடுத்த நிதியாண்டில் கடன் வாங்கும் அளவு குறையும்.தேசிய அளவில் 7% பொருளாதார வீழ்ச்சி என கணக்கிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு அரசின் கடன் அதிகரிக்கும் போது, மாநில பொருளாதாரமும் உயர்ந்து வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும், தமிழக அரசின் கடன் அளவு, நிதிக்குழு நிர்ணயித்த குறியீட்டிற்குள் தான் உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசியவர், நடப்பாண்டில் (2021-22)  டாஸ்மாக் மதுபான விற்பனை வருவாய், 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, மாநில அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல என்றும் கூறினார்.