சென்னை:

ருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மும்மொழிக்கொள்கையை எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பருவமழை பொய்த்ததன் விளைவாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து, தேர்தலுக்கு முன்பே ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறினார். மேலும் இதற்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜூன் மாதத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை குறுவை சாகுபடி செய்யும் வகையில் கர்நாடகம் தண்ணீர் திறக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த தொகுதியில் போட்டியிட்டதால்தான் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதே தவிர அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே உள்ளதாக முதலமைச்சர் விளக்க மளித்துள்ளார்.

திமுக நடைமுறைபடுத்த முடியாத பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளதாக கூறியவர்,  பிற மாநிலத்திலும் தமிழை பயிற்றுவிக்க வேண்டும் என கோரிக்கை வந்ததால்தான் டிவிட்டரில் பிரதமருக்கு கோரிக்கை விடுத்ததாகவும் தமிழக அரசு இரு மொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை தவிர மீதம் 6 பேரை விடுதலை செய்யக்கூடாது என அப்போதைய முதல்வர் கருணாநிதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்ததாகவும், அதை எதிர்கட்சிகள் ஏன் கேட்கவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.