நாளை முதல் 14 வித பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! மாற்றுப் பொருட்கள் என்ன?

14 வித பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை நாளை ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த பல வருடங்களாகவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்படு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் இயற்கை ஆர்வலர்கள், “மக்காத பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. நிலத்தின் மீது குவிந்து கிடக்கும், பிளாஸ்டிக் பைகளால், மழை நீர் பூமிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, ‘பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர, இதர, மக்காத, பிளாஸ்டிக் பொருட்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ் தமிழக அரசு, தடை விதித்தது.

உலக சுற்றுச்சூழல் தினமான, ஜூன், 5ல், சட்டசபையில், முதல்வர் பழனிசாமி, 110 விதியின் கீழ், இதற்கான அறிவிப்பை  வெளியிட்டார். பிறகு பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

எந்தெந்த பொருட்களுக்கு தடை?

உணவுப் பொருட்களை மடிக்க பயன்படுத்தும், பாலித்தீன் அல்லது பிளாஸ்டிக் தாள்,  ‘தெர்மாகோல்’ தட்டுகள்,  பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்,  பிளாஸ்டிக் குவளைகள்,  நீர் நிரப்ப பயன்படும் பைகள்,  பிளாஸ்டிக் கேரி பேக்,  பிளாஸ்டிக் கொடிகள்,  பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் பிளாஸ்டிக் பூச்சுள்ளபைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள்

போன்ற 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நாளை முதல்..

நாளை முதல் இவற்றை தயாரித்தல், விற்பனை செய்தல், இருப்பு வைத்தல், பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என, அரசு அறிவித்திருக்கிறது. ஒப்படைக்காமல், பதுக்கி வைத்திருந்தால், அவற்றை பறிமுதல் செய்யவும், அதிகாரிகளுக்கு, அரசு அதிகாரம் அளித்திருக்கிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் பொறுப்பு, மாநகராட்சி  ஆணையர்கள்  மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதை, உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்று பொருட்கள் என்ன?

தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, தாமரை இலை, மந்தாரை இலை, வாழை இலை, தேக்கு மர இலை, அலுமினியத் தாள், காகிதச் சுருள், கண்ணாடி அல்லது உலோகத்தால் ஆன குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.மேலும், மூங்கில் மற்றும் மரப் பொருட்கள்,காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித, துணி கொடி கள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், மண் குவளைகள் போன்றவற்றை பயன்படுத்த, அரசு அறிவுறுத்தியிருக்கிறது.