சென்னை:
மிழக ஆட்சி கலைந்துவிடும் என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தெரிவித்து உள்ளார். இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுகவை கைப்பற்றி, முதல்வராக சசிகலா திட்டமிட்ட தால்,  அதிமுக இரண்டாக பிளவு பட்டது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனி அணியாகவும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியாக வும் அதிமுக உடைந்தது.

இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றபடியால், அவரது ஆதரவாள ரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சிறைக்கு செல்லும்முன், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த, அவரது அக்காள் மகனான டிடிவி தினகரனை ஒரே இரவில் கட்சியில் இணைத்து, அவருக்கு  கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியும் வழங்கினார்.

அதையடுத்து அதிமுக வின் சின்னமான இரட்டைஇலையை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டையை இலையை தனது அணிக்கு பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவியும்  சிறைக்கு சென்றார். இதையடுத்து அவரது அணிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களை தொடர்ந்து டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து இரு அணிகளும் இணைய கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒருசிலர் முயற்சித்து வந்தனர்.  ஆனால், இரு அணிகளும் நிபந்தனைகளை விதித்ததால், ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரிடையே இணைப்பு முயற்சி தோல்வி அடைந்தது.

இதற்கிடையில், சசிகலா அணியிலும் பிரச்சினை ஏற்பட்டது. தினகரனுக்கு ஆதரவாக ஒருசில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்து வந்த நிலையில், பெரும்பாலான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக அதிமுக அணி 3 ஆக பிரிந்து உள்ளது.

இந்நிலையில், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

இது தமிழக அமைச்சர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து டிடிவி தினகரன்  பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்க சென்றார்.

இதையடுத்து மாநில அமைச்சர்கள் அனைவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து முதல்வருடனும் ஆலோசனை செய்தனர்.

அதையடுத்து  செய்தியாளர்டம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஏற்கனவே முடிவு செய்தபடி கட்சியிலும், ஆட்சியிலும்  டிடிவி தினகரன் பங்கு கிடையாது. ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்து நடைபெறும். அவர்கள் ஏற்கனவே கூறியபடி கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது. தான் கட்சி பணி ஆற்றுவேன் என்று அதிரடியாக கூறினார். அவருக்கு ஆதரவாக 10 எம்எல்ஏக்கள் 3 எம்பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன்  எம்.பி பேசும்போது, தற்போதைய எடப்பாடி தலைமையிலான அரசு விரைவில் கவிழ்ந்து விடும் என்றும், டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்குவது தொடர்பாக அதிமுக அம்மா அணியினர் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறிய மைத்ரேயன், தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று உள்ளதா என தேடும் சூழல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் என்றும் மைத்ரேயன்  கூறி உள்ளார்.

வரும் 14தேதி சட்டசபை கூட இருக்கும்  நிலையில், 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்று மேலும் 2 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவருக்கு மேலும் ஆதரவு பெருகும் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே 122 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு உள்ள நிலையில், தற்போது 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், சட்டசபை கூட்டம் நடைபெறுமா அல்லது  அதற்கு முன்பே ஆட்சி கவிழ்ந்துவிடுமா  என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த வேளையில் மைத்ரேயன் கூறிய கருத்தும் யோசிக்க வைக்கிறது.

இது கட்சி வட்டாரம் மட்டுமின்றி கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.