சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழகஅரசு இன்று பேச்சுவார்த்தை அழைத்துள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு, தமிழகஅரசு பணியில்  20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக தொடர் போராட்டத்தை கடந்த ஆண்டு (2020) அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து. முதல் நாள் போராட்டம் வன்முறையாக மாறியதால், பொதுமக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளானது. இதையடுத்து, அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாமகவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, மருத்துவர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில்,

‘தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேச்சு நடத்த வரும்படி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதையேற்று பா.ம.க. தலைவர் திரு. ஜி.கே.மணி தலைமையில் 3 உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. நல்ல முடிவை எதிர்பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு  சம்பந்தமாக நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையம் செயல்படத் தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக நீதிபதி குலசேகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.