மத்திய அரசு சொல்வது அப்பட்டமான பொய்.. கொந்தளிக்கும் தமிழக அரசு..

சென்னை :

ந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் உயர்கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி என்று கடந்த இருபது ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

நிலைமை இப்படி இருக்க அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட ஒரு தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பள்ளிகளில் படிப்பை இடையில் கைவிடும் மாணவ மாணவிகள் எண்ணிக்கை தமிழகத்தில் இருமடங்காக உயர்ந்துள்ளது என்பதே மத்திய அரசு சொன்ன அந்த தகவல்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆன ரமேஷ் போக்ரியால் நிஷாங் நாடாளுமன்றத்தில் பேசும்போது தமிழகத்தில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பைக் கைவிட்டு விடுவது 16.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். அதாவது மூன்றாண்டுகளில் இடைநிற்றல் என்பது 100 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

2015 2016 ஆம் ஆண்டில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை 8.1 சதவீதம் என்பதும் அவர் தந்த புள்ளிவிவரங்களில் ஒன்று. அடுத்த ஆண்டு 10 சதவீதமாக உயர்ந்தது என்று மத்திய அமைச்சர் அடித்துச் சொன்னார். இத்தோடு நிற்காமல் 1 முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் படிப்பை கைவிடுவது 5.9% என்பதும் மத்திய அரசின் தகவல்..

நேற்று தமிழக சட்ட சபையில் இந்த விவகாரம் புயலைக் கிளப்பியது. கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழகத்தில் இப்படி ஒரு நிலைமை என்று கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அரசு சொல்வது அனைத்தும் தவறான தகவல்கள் என்று குறிப்பிட்டார்.

மாநில அரசிடம் உள்ள புள்ளிவிவரத்தின்படி 2015-2016, 2016 – 2017 ஆகிய ஆண்டுகளில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்புகளில் இருந்து படிப்பை பாதியில் கைவிட்டவர்களின் சதவீதம் வெறும் 3.7 தான்.

தவறான தகவல்களை வெளியிட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை கடிதம் எழுதி இருப்பதாகவும் மத்திய அரசிடமிருந்து அதற்கான விளக்கம் இது வரை வந்து சேரவில்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக அரசை பொறுத்தவரை பட்ஜெட்டில் மற்ற எல்லா துறைகளை விட அதிகமாக ஒதுக்குவது பள்ளிக்கல்வித்துறைக்கு தான். கடந்த ஆண்டு 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போதும் மற்ற துறைகளுடன் பள்ளிக்கல்வித்துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

– ஏழுமலை வெங்கடேசன்

1 thought on “மத்திய அரசு சொல்வது அப்பட்டமான பொய்.. கொந்தளிக்கும் தமிழக அரசு..

  1. இது பொய்ன்னா, வேற விசயத்துக்கு முதல் மாநிலம். எங்கேயோ இடிக்குதே

Comments are closed.