தமிழ்நாட்டின் மாநில மீனாக ‘அயிரை மீன்’ அறிவிப்பு எப்போது?

யிரை மீன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு, குறிப்பாக மீன் பிரியர்களுக்கு நாவில் எச்சில் ஊறும். அவ்வளவு சுவை மிகுந்த அயிரை மீனை, தமிழகத்தின் மாநில மீனாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

பொதுவாக அயிரை மீன்கள் மழைக்காலங்கள் மற்றும் அறுவை காலத்திற்கு முன்பாகவே  அதிக அளவில் கிடைக்கும். இது ஏரி, குளம்,வாய்க்கால் ஆறு போன்றவற்றில் வாழ்ந்து வரும் சிறிய வகையிலான மீன்.

நெல் அறுவடைக்கு முந்தைய இரண்டு மாதங்களில் மட்டும் இவை இருக்கும். அந்த மாதங்களில் மட்டுமே, அயிரை மீன் விற்பனைக்கும் வரும். குறைவான வரத்தின் காரணமாக, அயிரை மீனுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். அயிரை மீன் குழம்புக்கு தனி ருசி உண்டு.

சுவை மிகுந்த இந்த மீன் ஆற்றின் தண்ணீரின் சுவைக்கேற்ப மீனின் சுவையும் மாறுபடும். நெல்லை தாமிர பரணி ஆற்று அயிரை மீனுக்கு தனிச்சுவை உண்டு. அதுபோல, காவிரி ஆற்றின் அயிரை மீனும் தனிச்சிறப்பு பெற்றவை.

இதை பக்குவமாக சுத்தம் செய்து சமைத்தால், இதன் சுவைக்கு எந்த விலைஉயர்ந்த மீனின் சுவையும் ஈடாகாது.

இவ்வளவு சுவைமிகுந்த அயிரை மீனை தமிழ்நாட்டின் மீனாக அறிவிக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் அதற்காக அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக விரைவில், தமிழகத்தின் தனிச்சிறப்பாக அயிரை மீன் வரலாற்றில் இடம்பிடிக்கும் என நம்புவோம்.