அரசு வேலையில் ஏமாற்றும் தமிழக அரசு! அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சென்னை,

மிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை என்று கூறிவிட்டு, ஆங்கில வழியில் படித்த வர்களை கொண்டு பணியிடங்கள் நிரம்பி வருகிறது தமிழக அரசு. இது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்று அன்புமணி ராமதாஸ் கண்டித்து உள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

. தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 187 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த வாரம் நிரப்பப்பட்டிருக்கின்றன.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 38 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த இடங்கள்ஆங்கில வழியில் படித்தவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. தமிழ் வழியில் படித்தால் அரசு வேலை என அறிவித்து ஏமாற்றும் அரசின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2013-14, 2014-15 கல்வியாண்டுகளில் காலியான 192 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு, அப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் 22.10.2016 அன்று நடைபெற்றன. அதன்முடிவுகள் 06.01.2017 அன்று வெளியிடப்பட்டு, 4 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியல் 27.04.2017 அன்று வெளியிடப்பட்டது.

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான ஆள்தேர்வு அறிவிக்கையில், மொத்தமுள்ள பணியிடங்களில், ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் 20% இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மொத்தம் 38 இடங்கள் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டி ருக்க வேண்டும். தமிழ் வழியில் பட்டம் பயின்றதாக மொத்தம் 39 பேர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், தகுதியானவர்கள் ஒருவர் கூட இல்லை என்று கூறி அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

மாறாக முழுக்க முழுக்க ஆங்கில வழியில் படித்தவர்களைக் கொண்டு 20 விழுக்காடு இடங்களும் நிரப்பப்பட்டிருக்கின்றன.

அபத்தமான அரசாணையும், கண்மூடித்தனமான பின்பற்றலும் தான் இந்த அவலத்திற்கு காரணமாகும்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவது குறித்து 2010ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட 145-ம் எண் கொண்ட அரசாணையில், அரசுப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்தவர்கள் முன்னுரிமை அடிப்படையிலான 20% இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உதவிப் பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், தமிழ் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பிற மொழி வழியில் படித்தவர்களைக் கொண்டு 20% இடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர் பணியைப் பொறுத்தவரை மேற்கண்ட இரு விதிகளுமே பொருந்தாது என்பது தான் இத்தனைக் குழப்பங்களுக்கும் காரணமாகும்.

உதவிப் பேராசிரியர் பணிக்கு அடிப்படைக் கல்வித் தகுதி முதுநிலைப் பட்டப்படிப்பு ஆகும். தமிழக அரசாணையின்படி முதுநிலைப் பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டும் தான் 20% இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியம் தவிர வேறு எந்த முதுநிலைப் பட்டப்படிப்பும் தமிழ் வழியில் கற்பிக்கப்படுவதில்லை. இவ்வாறு இருக்கும் போது, பட்டப்படிப்புக்கும் கூடுதலாக கல்வித் தகுதி கொண்ட பணியிடங்களைப் பொறுத்தவரை, பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்திருந்தாலே தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை அனுபவிக்கலாம் என்று அரசாணையில் தமிழக அரசு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அரசாணையில் தெளிவான விவரங்கள் இல்லாத நிலையில், உதவிப் பேராசிரியர் பணிக்கான தமிழ் வழிக்கல்வி இட ஒதுக்கீட்டை எவ்வாறு நிரப்புவது? என பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், அபத்தமான அரசாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்மூடித்தனமாக பின்பற்றியதால் தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்திருந்த 38 பேருக்கு கிடைத்திருக்க வேண்டிய உதவிப்பேராசிரியர் பணி அநியாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது.

தொலைநோக்குப் பார்வையின்றி, அரசாணை பிறப்பித்த அரசும், அதை அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் அப்படியே செயல்படுத்திய ஆசிரியர் தேர்வு வாரியமும் செய்த தவறுக்காக தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்த 39 மாணவர்கள் இப்பணிக்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களைக் கொண்டு, 20 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கணிதப் பிரிவில் 5 உதவிப் பேராசிரியர், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் தலா 4 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் பட்டப்படிப்புக்கும் கூடுதலாக கல்வித் தகுதி கொண்ட பணிகளைப் பொறுத்தவரை, பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணையை தற்காலிகமாக திருத்த வேண்டும். அனைத்துப் பாடப்பிரிவுகளும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு வரை தமிழ் வழியில் கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அதன் பின்னர் இப்போதுள்ள அரசாணையைச் செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.