சென்னை:  தமிழகத்தில் 95 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்  நாடு முழுவதும்  கடந்த  ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  மேலும்,  50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2வது கட்டமாக  50 வயதுக்கு குறைவான மற்றும் மாற்று நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

தற்போதுவரை நாடு முழுவதும் , 1,12,409 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.   தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை – 6,866 (கோவிஷீல்டு – 6,734) (கோவாக்ஸின் – 132) இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் 34 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் சென்னை காட்டாங்கொளத்தூர் மற்றும் திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது

150 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முன்களப்பணியாளர்கள் மட்டும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.