டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  ஆலையை திறக்க  தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தற்போதைய நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக தமிழகஅரசே ஆலையை ஏற்று நடத்தலாமே என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது.அதில்,  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்றும்த  கோரிக்கை வைத்தது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது,  மத்திய அரசு வழக்கறிஞர் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என தெரிவித்தார். அதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முன்னதாக இன்று காலை தூத்துக்குடியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஆலையை மீண்டும் திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தமிழகஅரசு ஆலையை திறக்காது என ஆட்சியர் உறுதியளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து  வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தமிழகஅரசு, ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது, ஆலையத் திறப்பது மீண்டும்  சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பதிலாக   நாடு முழுவதிலும் உள்ள மற்ற ஆலைகளில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மத்திய அரசு கவனம் செலுத்தலாம் என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே,  ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே என யோசனை தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், ஆலையை நாங்கள் ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடி பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நாட்டில், ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் ஆலையை திறக்கக்கூடாது என்று தமிழகம் கூறுவது சரியா எனகேள்வி எழுப்பியுள்ளது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆலையை திறக்க முடியாது என சொல்லக்கூடாது என கூறியதுடன், நிறுவனம் முக்கியமல்ல, மக்களின் உயிர் தான் முக்கியம் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழகஅரசு வழக்கறிஞர், தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு  நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று மற்றொரு அசம்பாவித சம்பவம் நடைபெறுவதை விரும்பவில்லை என  மீண்டும் கூறினார்.

இதுதொடர்பாக , தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,  வழக்கை வரும் 26ம் தேதி ஒத்திவைத்தது.