சென்னை: 

டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகஅரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு அவமானம் என்று செய்தியாளர்களிடம் பேசிய  ராகுல்காந்தி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழகத்தில்  இன்று தொடங்குகிறார்   ராகுல்காந்தி. அதற்காக நாகர்கோவிலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அவருடன் ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

முன்னதாக இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்த ராகுல், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் அளித்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகம் சென்றவர், அங்கு செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கூட்டணியை ஏற்படுத்தி இருப்பதாகவும்,  ஆனால், காங்கிரஸ் போதிய கூட்டணிகளை ஏற்படுத்தவில்லை என்று பாஜகவினரால்  பொய் தகவல் பரப்பப்படுகிறது என்றவர், பீகார், ஜம்முவில்கூட  நாங்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். பாஜகவுக்குதான் போதிய கூட்டணிகள் அமையவில்லை என்றார்.

காங்கிரசின் நோக்கம் சமூக நல்லிணக்கம் .என்றவர்… மோடி அரசில்  நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவது மக்களிடையே  கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்,  பாஜக இதை புரிந்து கொள்வதில்லை. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நாடு முன்னேற்றம் அடையும் என்று தெரிவித்தார்.

மோடி அரசு அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி வரியால் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிவர்,  நாங்கள் ஜிஎஸ்டியில் நிறைய மாற்றங்களை செய்ய போகிறோம் என்றவர், அதை நாங்கள் மாற்றுவோம். ஜிஎஸ்டி மாற்றம் மூலம் வரிகள் குறையும், மக்களுக்கும்  நிறைய பலன் கிடைக்கும் என்றார்.

புல்வாமாவில் 45 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அரசு இவர்களை காப்பதற்காக எதுவும் செய்யவில்லை. பாகிஸ்தான் இவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க அரசு என்ன செய்தது. நமது பாதுகாப்பு வீரர்களை அரசு கைவிட்டுவிட்டது.

மசூத் அசார் மசூத் அசாத்தை விடுதலை செய்தது பாஜகதான். பாஜகதான் இதை விளக்க வேண்டும்: ஏன் மசூதை விடுதலை செய்தார்கள் என்று. ஆலோசகர் அஜித் தோவல் இவர்களுடன்தான் இருந்தார் என்பதை மறக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் உட்பட பல மாநில கலாச்சாரங்கள் பாஜக அரசால் சீரழிக்கப்பட்டுள்ளன. நாக்பூரை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசு இயங்க முடியாது என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழகம் சீனாவுடன் போட்டியிடும் அளவுக்கு உற்பத்தி துறையில் திறமை காண்பித்துள்ளது. தமிழகத்தை இந்தியாவின் உற்பத்தி துறை மையமாக காங். ஆட்சிக்கு வந்ததும் மாற்றிக் காட்டுவோம் என்று உறுதி அளித்தார்.

மாநிலங்கள் நடுவே வேற்றுமை பாராட்டுவதுதான் தேச விரோதம். அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதில்தான் எனக்கு விருப்பம் என்றவர்,  பஞ்சாயத்து முதல் பிரதமர் வரை அதிகாரங்கள் பகிர்வு என்பதே எனக்கு விருப்பம் என்பதை தெரிவித்தார்.

ஆனால், தமிழக அரசு டெல்லியிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. டெல்லி யிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.