ரூ.1000 கோடி மதிப்புள்ள தமிழக அரசு பங்குகள்: 23ந்தேதி மும்பையில் ஏலம்

சென்னை:

ரூ.1000 கோடி மதிப்புள்ள தமிழக அரசு பங்குகள் வரும் 23ந்தேதி மும்பை ரிசர்வ் வங்கியில் ஏலம் விடப்படுகிறது.

2028ம் ஆண்டிற்கான தமிழக வளர்ச்சிக்கடனின் சிறு பகுதியை பங்குகளாக ஏலம் விட உள்ளதாக தமிழக அரசு  முடிவு செய்து அறிவித்து உள்ளது.  அதன்படி  8.05 சதவீதத்தை ஏலம் விட உள்ளதாகவும், அதன் மதிப்பு1000 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதி ஏற்கனவே பெற்று விட்ட நிலையில் வரும் 23ந்தேதி மும்பை ரிசர்வ் வங்கியில் ஏலம் நடைபெறுகிறது.

தமிழக அரசு தனது நிதிப் பற்றாக்குறையை நிரப்ப, சந்தையிலிருந்து தமிழ்நாடு வளர்ச்சிக்கடன் மூலம் நிதி திரட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும், வளர்ச்சிக்கடனின் குறிப்பிட்ட சதவீதத்தை பங்குகளாக ஏலத்திற்கு விடுகிறது.

இதன் மூலம், கிடைக்கும் நிதியை அரசு பயன்படுத்திக்கொள்ளும். 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்த பின், அரசு இந்த iந்த நிதியை ஏலத்திற்கு பெற்றவர்களிடம் திரும்ப செலுத்திவிடுகிறது. இந்நிலையில் 2028ம் ஆண்டு முதிர்ச்சி பெரும் தமிழ்நாடு வளர்ச்சிக்கடன் நடப்பு ஆண்டு ஏலத்துக்கு விடப்படுகிறது.

1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இப்பங்குகள் அக்டோபர் 23ம் தேதி ரிசர்வ் வங்கி தனது மும்பை அலுவலகத்தில் ஏலத்துக்கு விட உள்ளது.  இதில், போட்டி ஏலம் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலம் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் நடத்தபட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சிகடன் மூலம் சந்தையிலிருந்து அதிக அளவில் கடன் வாங்கும் மாநிலங்களுள் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 34, 265 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.