Random image

உச்சநீதி மன்ற தீர்ப்பு: சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட தமிழகஅரசுக்கு பழ.நெடுமாறன் கோரிக்கை

சென்னை:

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்,  தமிழக சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழகஅரசு முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் இன்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள  7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு உடடினயாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி,  தீர்மானம் நிறைவேற்றி, அதை  ஆளுநரிடம் அளித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பழ.நெடுமாறன்  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

டந்த 1991ம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, விடுதலைப்புலிகளின் தற்கொலை பெண் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப் பட்டார். உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவம், கடந்த  1991 ஆம் ஆண்டு மே 21ம் தேதி நடை பெற்றது.

இது தொடர்பான வழக்கில் 1998ம் ஆண்டு இறுதி தீர்ப்பு  வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உட்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததன் மூலம் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதை தொடர்ந்து,  அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு  முடிவு செய்தது. ஆனால் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று கூறி மத்திய அரசு தடுத்து வருகிறது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஏழு பேரின் விடுதலை குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்ய முடியாது. நாட்டின் பிரதமரை படுகொலை செய்த வர்களை விடுதலை செய்தால், அது சர்வதேச ரீதியாகவும், அபாயகரமான செயலுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும். இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தெளிவு படுத்தப் பட்டது என மத்திய அரசு கூறியது.

இந்த வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில்,  ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு கைதிகளை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு, இவர்களின் விடுதலைக்கு தமிழக அரசிடம் ஆளுநர் பரிந்துரைக்கலாம் என்றும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது