தமிழக அரசை கலைக்க வேண்டும்! ராமதாஸ்

சென்னை, 

ரட்டை இலையை மீட்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற  தினகரனை கைது செய்து அவர் வழிகாட்டுதலின்படி நடக்கும் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம், தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அச்சின்னத்தை அ.தி.மு.க. அம்மா அணிக்கு பெற்றுத் தருவதற்காக டி.டி.வி. தினகரனிடம் இருந்து ரூ. 1.30 கோடி கையூட்டுப் பெற்று வைத்திருந்ததாக சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்த தினகரன், இப்போது தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தை விலை கொடுத்து வாங்க முயன்றிருக்கிறார்.

தினகரனின் ஊழலையும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களையும், அவரது தனிப்பட்ட நடத்தையாக பார்க்கக் கூடாது. அ.தி.மு.க. அம்மா அணி மற்றும் தினகரனின் வழிகாட்டுதல்படி செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசின் செயல்பாடுகளாகத்தான் பார்க்க வேண்டும்.

இந்த அரசு இனியும் தொடர அனுமதித்தால் தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஊழலும் முறைகேடுகளும் பெருகி விடும்.

தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் இந்திய உச்சநீதிமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் விலை பேசுவதற்குக்கூட இவர்கள் தயங்கமாட்டார்கள்.

இதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டும் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தினகரனின் வழிகாட்டுதலில் நடைபெறும் தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed