ஹஜ் பயணத்துக்கு தமிழக அரசு மானியம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை:

நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானி யத்தை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசு மானியம் வழங்குவவதாக அறிவித்து உள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து சுமார் 2 லட்சம் இஸ்லாமியர்கள்  புனித பயணமாக மெக்கா சென்று வருவது வழக்கம். இவர்களுக்கு ஆண்டு தோறும்  மத்திய அரசு சார்பாக ரூ.500 கோடி வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த மானியத்தை கடந்த ஜனவரி 16ந்தேதி  மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது.  இந்த மானியத்தை பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்திருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இந்த நிலையில், தமிழக அரசு, தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியம் வழங்கும் என்று அறிவித்து உள்ளது.

நேற்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் எடப்பபாடி பழனிச்சாபமி, ஹஜ் பயணத்துக்கு ஆண்டுக்கு  ரூ. 6 கோடி மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் காரணமாக  2018-19 ஆம் ஆண்டில் 3,828 ஹஜ் பயணிகள் பயன் அடைவர் என்றும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வஃக்பு வாரியம் சார்பில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் வஃக்பு வாரியம் சார்பில், மானியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.